தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தாமல் பிற்போடும் முயற்சியில் அரசாங்கம் - ஹக்கீம் குற்றச்சாட்டு...!


புனர்வாழ்வு செயலகம் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், உயர் நீதிமன்றம் அரசாங்கத்தின் மீது பாரிய குற்றப்பகிர்வை வழங்கி இருக்கின்றது.

அத்துடன் அரசாங்கம் தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தாமல் பிற்போடுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாகவே தெரிகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இரண்டாவது நாளாக இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாங்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் 21 ஆம் திருத்தத்தை முன்வைத்திருந்தோம். என்றாலும் ஜனாதிபதியின் தத்துவங்களை குறைப்பது தொடர்பில் மக்கள் தீர்ப்பு பெறவேண்டும் என்ற உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் அது தடைப்பட்டது. இந்நிலையில் அரசாங்கம் பல சவால்களுக்கு மத்தியில் 22 ஆம் திருத்தத்தை கொண்வந்திருக்கின்றது.

இதிலும் ஜனாதிபதியின் தத்துவங்களை குறைப்பதற்கு மக்கள் தீர்ப்பு பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், சில திருத்தங்களுடன் 22 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. அதனால் இந்த திருத்தத்துக்கு நாங்கள் ஆதரவாளிக்கின்றோம்.

அரசியலமைப்பின் 17 மற்றும் 19ஆம் திருத்தங்களின் போது ஜனாதிபதியின் தத்துவங்களை குறிப்பிடத்தக்கவகையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். ஆனால் 22 ஆம் திருத்தத்தில் அந்த தத்துவங்களை குறைப்பதற்கு மக்கள் தீர்ப்பு வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது. அதன் மூலம் நாங்கள் எதிர்பார்த்த திருத்தங்கள் இதில் வரவில்லை.

மேலும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், அரசாங்கத்தின் மீது குற்றப்பகர்வை தெரிவித்திருக்கின்றது.

இந்த சட்டமூலம் முழுவதும் அரசியலமைப்பு முரணாக இருப்பதால் விசேட பெரும்பான்மை மூலமே நிறைவேற்றப்படலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது.

குறிப்பாக முன்னாள் போராளிகள், போராட்டக்கார்கள் என்ற வார்த்தைகள் சட்டமூலத்தில் இருந்து நீக்கப்படவேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது. இது அரசாங்கத்தின் மீதான பாரியதொரு குற்றப்பகர்வாகும்.

அதேபோன்று உயர்பாதுப்பு வலயம் தொடர்பாக ஜனாதிபதி வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். இறுதியில் அதனை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டி ஏற்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான முகாம்கள் தொடர்பாகவும் இவ்வாறானதொரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் அடிப்படை உரிமைகள் முழுமையாக மீறப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று தற்போது மீண்டும் மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. உள்ளூராட்சி தேர்தலை எல்லை நிர்ணய குழு மற்றும் பல்வேறு விடயங்களை தெரிவித்து பிற்போட முயற்சிக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் மக்களின் வாக்குரிமையை இல்லாமலாக்கும் செயலாகும்.

மாகாணசபை தேர்தல் சட்டமூலத்துக்கு நாங்கள் ஆதரவாக செயற்பட்டோம் இறுதியில் அது தாேல்வியில் முடிவடைந்தது. அதனால் மாகாணசபைகள் தற்போது முழுமையாக செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.

அத்துடன் எந்தவொரு மாகாணசபைகளும் சட்ட ரீதியில் அமைக்கப்படாமல் இருப்பதால், அந்த சபைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றன.

அதனால் இது பாராளுமன்ற சட்டவாக்கத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் நாங்கள் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

எனவே அரசாங்கத்தின் இந்த முயற்சிகள் அனைத்தும் தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தாமல் ஒத்திவைப்பதற்கான முயற்சியாகவே தெரிகின்றது.

அதனால் அரசாங்கம் தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தி மக்களின் வாக்குரிமைகளை பயன்படுத்த இடமளிக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

Previous Post Next Post