கோதுமை மா கிலோ ஒன்றின் விலை கடந்த வாரங்களில் 400 ரூபாவை விட அதிகமாகக் காணப்பட்டது. எனினும் கொழும்பு – புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் தற்போது ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 290 ரூபாவாகக் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க முடியாது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் , இதுவரையில் எம்மால் அந்த விலைக்கு மாவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகிறது.
எனவே, பாண் உள்ளிட்ட எந்தவொரு பேக்கரி உற்பத்திகளினதும் விலைகளை குறைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை. காரணம் இதற்கு முன்னர் சுமார் 200 ரூபாவாகக் காணப்பட்ட மாவின் விலை , 400 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது. எனவே தற்போது எம்மால் விலைகளைக் குறைக்க முடியாது என்று என்.கே.ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதன் பயனை நுகர்வோருக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். அதற்கமைய கொத்துரொட்டியின் விலையை 50 ரூபாவால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment