பாகிஸ்தானுடனான அரை இறுதியில் நியூஸிலாந்த…!


பாகிஸ்தானுடன் மூன்று தசாப்தங்களாக இருவகை உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டிகளில் இருந்துவரும் 'அபசகுணத்தை' நியூஸிலாந்து போக்குமா? இல்லையா? என்பதற்கான விடை சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (09) நடைபெறவுள்ள ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டியில் கிடைத்துவிடும்.

1992இலிருந்து இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 3 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டிகளிலும் பாகிஸ்தானே வெற்றிபெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் கூட்டாக லீக் முறையில் நடத்தப்பட்ட 1992 உலகக் கிண்ண (50 ஓவர்கள்) கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை ஈட்டிய நியூஸிலாந்து 8ஆவது போட்டியில் 7 விக்கெட்களால் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்ததுடன் தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதியிலும் அதே அணியிடம் 4 விக்கெட்களால் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளில் 1999இல் கூட்டாக நடத்தப்பட்ட உலகக் கிண்ண அரை இறுதியிலும் பாகிஸ்தானிடம் 9 விக்கெட்களால் நியூஸிலாந்து படுதொல்வி அடைந்தது.

தென் ஆபிரிக்காவில் 2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியிலும் அரை இறுதியில் பாகிஸ்தானிடம் 6 விக்கெட்களால் நியூஸிலாந்து தோல்வி அடைந்தது.

இவ்வாறாக உலகக் கிண்ண அரை இறுதிகளில் எதிர்கொண்டுவந்த 'அபசகுணத்தை' இந்த வருடம் நல்ல சகுணமாக மாற்றி நியூஸிலாந்து வெற்றிபெறும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

2007இல் முதலாவது அத்தியாயத்தில் அரை இறுதியில் விளையாடிய இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து ஆகிய 3 அணிகள் மீண்டும் இந்த வருடமும் அரை இறுதியில் விளையாடுகின்றன. அவுஸ்திரேலியாவுக்குப் பதிலாக இங்கிலாந்து 4ஆவது அணியாக இம்முறை இடம்பெறுகிறது.



முதல் 3 அத்தியாயங்களில் சம்பியன்களான 3 அணிகள் இம்முறை அரை இறுதிகளில்



ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் முதல் மூன்று அத்தியாயங்களில் சம்பியன்களான இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010) ஆகிய அணிகளும் 2021இல் இரண்டாம் இடத்தைப் பெற்ற நியூஸிலாந்தும் 8ஆவது அத்தியாயத்தில் அரை இறுதிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளமை மற்றொரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

15 வருடங்களுக்கு முன்னர் தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் முதலாம் சுற்றில் ஒரே குழுவில் இடம்பெற்ற இந்தியா சம்பியனானதுடன் பாகிஸ்தான் இரண்டாம் இடத்தைப் பெற்றது. அதே போன்ற ஒரு நிலை இந்த வருடமும் ஏற்படலாம் என கிரிக்கெட் பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா இல்லையா என்பதற்கான முதலாவது விடை இன்று கிடைத்துவிடும். இரண்டாவது விடை நாளை கிடைக்கும்.



நடப்பு சம்பியனை வீழ்த்தியது நியூஸிலாந்து



அவுஸ்திரேலியாவில் இந்த வருடம் நடைபெறும் இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்றுக்கான ஆரம்பப் போட்டியில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை மண்கவ்வச் செய்தது நியூஸிலாந்து.

ஆப்கானிஸ்தானுடனான அதன் இரண்டாவது போட்டி மழையினால் கழுவிப்போனது. 3ஆவது போட்டியில் இலங்கையை 65 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிகொண்ட நியூஸிலாந்துக்கு 4ஆவது போட்டியில் அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்துடனான அப் போட்டியில் 20 ஓட்டங்களால் நியூஸிலாந்து தோல்வி அடைந்தது.

அயர்லாந்துடான கடைசி சுப்பர் 12 சுற்று போட்டியில் 35 ஓட்டங்களால் வெற்றிபெற்தன் மூலம் அரை இறுதி வாய்ப்பை நியூஸிலாந்து உறுதிசெய்துகொண்டது.



அதிரடிக்கு பெயர்பெற்ற நீண்ட துடுப்பாட்ட வரிசை



முன்வரிசை வீரர்களான ஃபின் அலன், டெவன் கொன்வே, க்ளென் ஃபிலிப்ஸ் ஆகியோர் எத்தகைய பந்துவீச்சுகளையும் சிதறடிக்கும் ஆற்றல் மிக்கவர்கள், அத்துடன் அணித் தலைவர் கேன் வில்லியம்ஸன் நிதானம் கலந்த வேகத்துடன் ஓட்டங்களைப் பெறக்கூடியவர். அதுமட்டுமல்லாமல் எத்தகைய சூழ்நிலைகளிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடக்கூடிய நீண்ட துடுப்பாட்ட வரிசை நியூஸிலாந்து அணியில் இருப்பது அவ்வணிக்கு அனுகூலமாக அமையும்.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தியுள்ள டிம் சௌதீ (129 விக்கெட்கள்), இஷ் சோதி (109) ஆகியோருடன் மிச்செல் சென்ட்னர், ட்ரென்ட் போல்ட் ஆகியோர் பந்துவீச்சில் சாதிக்கக்கூடியவர்கள்.



சர்வதேச இ -20 மும்முனை தொடரில் நியூஸிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்



உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் நியூஸிலாந்தில் நடைபெற்ற மும்முனை சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் இந்த இரண்டு அணிகளும் சந்தித்தபோது இறுதிப் போட்டி உட்பட 2 - 1 ஆட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியிருந்தது.

எவ்வாறாயினும் பாகிஸ்தானின் உலகக் கிண்ண ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

குழு 2இல் கிரிக்கெட்டில் தனது பரம வைரியான இந்தியாவிடமும் அதனைத் தொடர்ந்து ஸிம்பாப்வேயிடமும் கடைசி பந்துகளில் வெற்றிகளைத் தாரைவார்த்த பாகிஸ்தான் அதன் பின்னர் நெதர்லாந்து, தென் தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளை வெற்றிகொண்டது. ஆனால் அதன் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குநியாகவே இருந்தது



தென் ஆபிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதால் அரை இறுதி வாய்ப்பை பெற்ற பாகிஸ்தான்



தென் ஆபிரிக்காவை ஆச்சரியத்தக்க வகையில் நெதர்லாந்து வீழ்த்தியதும் பாகிஸ்தானுக்கு அரை இறுதியில் நுழைவதற்கான வாயில் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தனது கடைசி சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை வெற்றிகொண்ட பாகிஸ்தான் அரை இறுதியில் நியூஸிலாந்தை எதிர்த்தாட தகுதிபெற்றது..

இவ்வாறான பெறுபேறுகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் பலம் குன்றிய அணி என்று கூறமுடியாது.



ஸ்திரமான துடுப்பாட்டவரிசை



ஸ்திரமான அத்திவாரத்தை இட்டுக்கொடுக்கக்கூடிய இரண்டு ஆரம்ப வீரர்களான மொஹமத் ரிஸ்வான், அணித் தலைவர் பாபர் அஸாம், சரிவைத் தடுத்து நிறுத்தக்கூடிய 3ஆம் இலக்க வீரர் ஷான் மசூத் ஆகியோர் பாகிஸ்தான் அணியில் இடம்பெறுகின்றனர். மத்தியவரிசையில் நிதானம், ஆக்ரோஷம் ஆகிய இரண்டும் கலந்த வலுதுகை மற்றும் இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

அது மட்டுமல்லாமல் உலகத் தரம்வாய்ந்த வெகப்பந்துவீச்சாளர்களும் சுழல்பந்துவீச்சாளர்ளும் அணியில் இடம்பெறுவது பாகிஸ்தானுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைகிறது.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் முதலாவது பாகிஸ்தானியராக 100 விக்கெட்களைப் பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பு சுழல்பந்துவீச்சாளர் ஷதாப் கானுக்கு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 82 போட்டிகளில் 97 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

அவருடன் ஹரிஸ் ரவூவ், ஷஹீன் ஷா அவ்றிடி, மொஹமத் நவாஸ், மொஹமத் வசிம் ஆகியோர் தங்களது திறமையான பந்துவீச்சுகள் மூலம் நியூஸிலாந்துக்கு அச்சுறுத்தலாக விளங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானும் நியூஸிலாந்தும் 2007இல் அரை இறுதி உட்பட இருபது 20 உலகக் கி;ண்ணத்தில் 6 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. அவற்றில் பாகிஸ்தான் 4 - 2 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டிலும் 28 போட்டிகளில் பாகிஸ்தான் 17 - 11 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.



அணிகள்



பாகிஸ்தான்: பாபர் அஸாம் (அணித் தலைவர்), மொஹமத் ரிஸ்வான், ஷான் மசூத், மொஹமத் ஹரிஸ், இப்திகார் அஹ்மத், ஷதாப் கான், மொஹமத் நவாஸ், ஹரிஸ் ரவூப், மொஹமத் வசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி.



நியூஸிலாந்து: ஃபின் அலன், டெவன் கொன்வே, கேன் வில்லியம்சன் (தலைவர்), க்லென் ஃபிலிப்ஸ், டெரில் மிச்செல், ஜேம்ஸ் நீஷாம், மிச்செல் சென்ட்னர், டிம் சௌதீ, இஷ் சோதி, லொக்கி பேர்குசன், ட்ரென்ட் போல்ட்.

Post a Comment

Previous Post Next Post