கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச வங்கிகளின் அதிகாரிகள் தங்களது சேவைக் காலத்தில் பயன்படுத்திய வாகனங்களை அவர்கள் 60 வயதில் ஓய்வு பெறும்போது தங்களுடன் எடுத்துச் செல்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை உடனடியாக கைவிடுமாறு நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர்கள், அனைத்து அரசாங்க வங்கிகளின் தலைவர், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் விசேட சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டு இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க வங்கி ஒன்றின் 20 அதிகாரிகள், தாம் பயன்படுத்திய வாகனங்களை ஓய்வுபெறும்போது எடுத்துச் செல்ல முயற்சித்த சம்பவம் தொடர்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து நிதியமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த வாகனங்களின் மதிப்பீட்டு விலைகளும் குறைக்கப்பட்டு பணிப்பாளர் சபையின் தீர்மானத்தின் பிரகாரம் இவ்வாறு அதிகாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
பணிப்பாளர் சபையினால் எடுக்கப்படும் இவ்வாறான தீர்மானங்களை இரத்துச் செய்வதுடன் வாகனங்கள் தொடர்பில் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களையும் நிதியமைச்சுக்கு அறிவிக்குமாறும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment