ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது.
ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்க ளைப் பெற்று மிகவும் அவசியமான வெற்றியைப் பெற்றது.
இப் போட்டி மழையினால தடைப்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டபோதிலும் இந்தப் போட்டி தடையின்றி நடைபெற்றது.
இந்த போட்டி முடிவை அடுத்து அரை இறுதிக்கு செல்வதற்கான இலங்கையின் வாய்ப்பு சிறிய அளவில் பிரகாசம் அடைந்துள்ளது.
ஆனால், குழு 1இல் நடைபெறவுள்ள கடைசிக் கட்ட முடிவுகளே இக் குழுவிலிருந்து எந்தெந்த அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்பதை உறுதிசெய்யும்.
இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும் எஞ்சிய போட்டிகளில் தோல்வி அடைந்தால் அரை இறுதி வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும்.
இலங்கை அதன் கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியிலும் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
குசல் மெண்டிஸும் தனஞ்சய டி சில்வாவும் 2ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களுடன் வெளியேறினார். (46 - 2 விக்.)
எனினும் தனஞ்சய டி சில்வாவும் சரித் அசலன்கவும் 3 ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு நம்பிக்கை ஊட்டினர்.
மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களாக இருந்தபோது சரித் அசலன்க 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
ஒரு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தனஞ்ச டி சில்வாவுடன் இணைந்த பாணுக்க ராஜபக்ஷ 4ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு அவிசியமான வெற்றியைக் கிடைக்கச் செய்தார்.
தனஞ்சய டி சில்வா 42 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 66 ஓட்டங்களுடன் ஆட்மிழக்காதிருந்தார்.
வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது பானுக்க ராஜபக்ஷ 18 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் முஜிப் உர் ரஹ்மான் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராஷித் கான் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.
ரஹ்மானுல்லா குர்பாஸ் (28), உஸ்மான் கானி (27) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பவர் ப்ளே ஓவர்களில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், 7ஆவது ஓவரில் குர்பாஸின் விக்கெட்டை லஹிரு குமார கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.
முதல் ஆறு துடுப்பாட்ட வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்கள் கணிசமான ஓட்டங்களைப் பெறத் தவறியமை ஆப்கானிஸ்தானுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.
ஆரம்ப வீரர்களைவிட இப்ராஹிம் ஸத்ரான் (22), நஜிபுல்லா ஸத்ரான் (18), மோஹமத் நபி (13) ஆகியோர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க டி சில்வா 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லஹிரு குமார 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 9 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கசுன் ராஜித்த 31 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Post a Comment