சர்வதேச நாணய நிதியம் (IMF) பரிந்துரைத்த பொருளாதார திட்டத்தின் கட்டமைப்பிற்குள் 2023க்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நேரடி வரிகளை அதிகரிப்பதா அல்லது மறைமுக வரிகளை அதிகரிப்பதா மற்றும் மாநில செலவினங்களைக் கட்டுப்படுத்துவதா என்பதை வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்துவோம்.
இது வரவு செலவுத் திட்டத்தின் கட்டமைப்பாக இருக்கும். மேலும் இது சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த பொருளாதார இலக்குகளையும் பிரதிபலிக்கும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தம் அடுத்த கட்ட கலந்துரையாடலின் பின்னர் சமர்ப்பிக்கப்படும்.
கடனாளிகளுடன் நாங்கள் முத்தரப்பு உடன்படிக்கைகளில் ஈடுபட வேண்டியிருக்கும் என்பதால், இது நீண்ட காலம் ஆகாது.
கடனாளிகளுடனான கலந்துரையாடலின் அடிப்படையானது கடன் தள்ளுபடி செய்யப்படுமா அல்லது அவற்றைத் தீர்ப்பதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படுமா என்பதுதான்.
அரசியலமைப்பு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று சிவில் உறுப்பினர்களின் பெயர்களை பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பு பேரவை இறுதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டதன் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்க முடியும்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான சட்டங்கள் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment