இஸ்லாமியர்கள் முழுமையாக வாழும் அரபுலகின் எந்த நாட்டிலும் உலகின் அனைத்து மக்களும் வந்து சேரும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது;
கத்தார் அதை செய்தது; ஆம்,உலக மக்கள் அனைவரையும் தன்னிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
தனது சொந்த மண்ணில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பையை தன் மண்ணிலிருந்து கொடுக்கப் போகிறது.
போட்டி நடக்கும் தேதிகளை தன் மண்ணின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு முடிவு செய்தது.
போட்டியின் இறுதித் தேதியை அதன் தேசிய தினத்துடன் பொருந்துமாறு அமைத்துக் கொண்டது.
கடைசியாகவும் முக்கியமானதும் இதுதான்;
அரேபியர்களை ஒன்றிணைத்த அரபு-இஸ்லாமிய கலாச்சாரத்தின் யதார்த்தத்தை, முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் பாமர மக்களிடம் கருத்துருவாக்கம் செய்து வைத்திருந்த மேற்குலக மக்களை தனது நாட்டிற்கு வரவழைத்து, அரபு-இஸ்லாமிய கலாச்சாரத்தை நேரடியாக புரிய வைத்தது.
இஸ்லாத்தைப் பற்றிய விழிப்புணர்வை மேற்குலகின் பாமர மனிதனும் அறிந்து கொள்ளும் ஏற்பாடுகளை செய்து போட்டியின் மூலமாக தனது கலாச்சாரத்தையும் தனது கொள்கைகளையும் நிரூபித்து காட்டியிருக்கிறது.
அதற்காக டாக்டர் ஜாகிர் நாயக் உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழி பேசும் இஸ்லாமிய பிரச்சாரகர்களை வரவழைத்து இஸ்லாத்தைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
போட்டிகளின் துவக்க நிகழ்ச்சியின் போது ஞானிம் அல்மிஃப்தாஹ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞனின் மூலமாக அல்குர்ஆனின்
49: 13-வது வசனத்தை படிக்க வைத்து, உலகெங்கிலும் இருந்து அந்த நிகழ்ச்சியை நேரலை மூலம் பார்த்துக் கொண்டிருந்த 250 கோடிக்கும் அதிகமான மக்களிடம் இஸ்லாத்தின் கொள்கை இதுதான் என்று அறைகூவல் விடுத்திருக்கிறது.
பொது இடங்களில் மது அருந்துதல், அரைகுறை ஆடையுடன் ஆண்,பெண் வித்தியாசமின்றி ஆடிப்பாடி மகிழ்தல், ஓரினச் சேர்க்கை கலாச்சாரத்தை ஊக்குவித்தல் போன்ற ஒழுக்கக்கேடான அனைத்து செயல்பாடுகளையும் சட்டபூர்வமாக தடை செய்து, இஸ்லாமிய வழியில் மனித குல ஒழுக்கமாண்புகளை மக்களுக்கு புரிய வைக்கும் பிரச்சாரத்தில் வெற்றி கண்டிருக்கிறது கத்தர் என்றே சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் கத்தார் இந்த உலக போட்டியின் மூலமாக தனது இஸ்லாமிய பிரச்சாரத்தை சரியான திசையில் கொண்டு சென்றிருக்கிறது அதுவே மிகப்பெரிய வெற்றி தான்.
அஸ்கர் அலி - பத்திரிகையாளர்
திண்டுக்கல் மாவட்டம் - தமிழ்நாடு
Post a Comment