வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து 13-ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும், அதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தௌிவுபடுத்த வேண்டுமென அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அமைச்சர், இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தாம் கரிசனை கொண்டுள்ள போதிலும், அதுவே முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினையாகிவிடக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து சமஷ்டி கோரும் தரப்புக்கள் இணைந்த வட, கிழக்கில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் அதிகாரம் என்னவென்பது பற்றி மனம் திறப்பது அவசியமெனவும் முஸ்லிம் மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு பேசுவதே சிறந்தது எனவும் குறித்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் இருப்பாரேயானால், வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்போகும் அரசியல் தீர்வை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என அமைச்சர் நசீர் அஹமட் கோரியுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஹக்கீமிற்கும் சுமந்திரனுக்கும் இடையில் இதுவரை காலமும் இரகசியமாக நடத்தப்பட்ட பேச்சுகள் வௌிக்கொணரப்படுவது அவசியம் எனவும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிந்திருக்க வேண்டுமென ஹக்கீம் கூறுவாரேயானால், அந்தந்த மாகாணங்களில் கையகப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதுடன், காணிகளின் எல்லை பிரச்சினைகளும் நிவர்த்திக்கப்பட வேண்டும் என அமைச்சர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இந்த விடயத்தில் கடைப்பிடிக்கும் மௌனமும் கலைக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்ட பின்னரே வடக்கு , கிழக்கில் முஸ்லிம்கள் இன சுத்திகரிப்பிற்கு உள்ளானதாக தெரிவித்துள்ள அமைச்சர் நசீர் அஹமட், அதன் பின்னரே முஸ்லிம்களின் காணிகள் கிழக்கில் அபகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே, 13 ஆவது திருத்தத்திற்கு முஸ்லிம்கள் அஞ்சுவதாகவும் அமைச்சர் நசீர் அஹமட் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment