விவசாய அமைச்சு: குறைந்த வருமானம் கொண்ட விவசாய குடும்பங்களுக்கு கொடுப்பனவு...!


சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் (USAID) நிதியுதவியின் கீழ் 7 மாவட்டங்களில் குறைந்த வருமானம் கொண்ட நெல் விவசாய குடும்பங்களுக்கு தலா 15,000 கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இந்த கொடுப்பனவு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, வவுனியா, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாதாந்தம் 41,500 ரூபாவிற்கும் குறைந்த வருமானம் பெரும் விவசாய குடும்பங்களுக்கு இந்த உதவி தொகையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாயத்துறை அமைச்சு, விவசாய அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பிரதிபலனாக குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு இந்த உதவித் தொகையை வழங்குமாறு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த உதவித் தொகையை இரு கட்டங்களின் கீழ் ஜனவரி மாதத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எம்.எச்.எல்.அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நாட்டில் நெல் விவசாயத்தில் ஈடுபடும் 12 இலட்சம் விவசாயிகளுக்கு 8 பில்லியன் ரூபா நிதியுதவியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய 10,000 - 20,000 ரூபா நிதியை விவசாயிகளுக்கு வழங்கும் அதேவேளை, அதன் முதற்கட்டத்தின் கீழ் 4 பில்லியன் ரூபாவினை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் குறித்த விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எஞ்சிய 4 பில்லியன் ரூபா ஜனவரியில் விவசாயிகளில் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படும் என்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் கீழ் ஒரு ஹெக்டயர் நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு 10,000 ரூபாவும் , 2 ஹெக்டயர் நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு 20,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

இந்த கொடுப்பனவுகள் எந்தவொரு விவசாயியிடமிருந்தும் மீளப் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த பெரும்போகத்தின் போது ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு யூரியா உரத்தை இலவசமாக வழங்குவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் , ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post