தலைமுறை காணாத பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வரை வீழ்ச்சி கண்டிருப்பதோடு இதனால் ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டு நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில் கிறிஸ்மஸ் பயணங்களும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன.
கடும் பனிப்பொழிவு மற்றும் அலறல் ஒலியை எழுப்பக்கூடிய காற்று ஆண்டின் பரபரப்பான விடுமுறை காலத்தை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆர்டிக்கில் இருந்து வீசும் குளிர் காற்றே அமெரிக்கா மற்றும் கனடாவில் உறையும் காலநிலையை உருவாக்கியுள்ளது.
இந்த பனிப்புயல் குறித்து காலநிலை அவதானிப்பு நிலையம் மில்லியன் கணக்கான மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளியே செல்வோர் சில நிமிடங்களுக்குள் உறையும் நிலைக்கு முகம்கொடுக்கக் கூடும் என்று அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “நீங்கள் சிறுவராக இருந்தபோது இருந்த பனிக்காலம் அல்ல இது. இது மிகத் தீவிரமானது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
100 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தமது வீதிப் பயணங்களை ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கும் நிலையில் அங்கு எதிர்படுபவற்றை மறைக்கும் வீதிகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க வாகனப் போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது.
நாட்டின் வடக்கை நோக்கிச் செல்லும் பிரதான நெடுஞ்சாலை தெற்கு டகோடாவில் இருந்து மூடப்பட்டுள்ளது. “போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு வீதியில் இடையூறை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று தெற்கு டகோமா போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
“பல அதிவேகப் பாதைகளும் தற்போது பயணிக்க முடியாதவையாக மாறியுள்ளன. பனி நிரம்பியருப்பது மற்றும் சறுக்கும் தன்மை காரணமாக வீதிகளில் பயணிப்பது முடியாத ஒன்றாகியுள்ளது” என்று அது குறிப்பிட்டுள்ளது.
மறுபுறம் கடந்த வியாழனன்று 22,000க்கும் அதிகமான விமானப்பயணங்கள் தாமதித்திருப்பதோடு 5,500 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
Post a Comment