ஓமானில் வீட்டுப் பணிப்பெண்களாக சென்ற மேலும் சில இலங்கை பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற சித்திரவதை சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், ஓமானுக்கு சென்று முன்னெடுத்த விசாரணைகளின் மூலம் பல விடயங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
15 ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வீட்டுப் பணிப்பெண் ஒருவர், ஓமான் பிரஜை ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த ஓமான் பிரஜை தன்னை இலங்கை பிரதிநிதி என அறிமுகப்படுத்திக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் 2 இலங்கை பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் இலங்கையைச் சேர்ந்த 2 உப முகவர்கள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை பெண்ணொருவர் கால்நடை மேய்ப்பில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலும் தகவல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் துன்புறுத்தல்களுக்குள்ளான வீட்டுப் பணிப்பெண்கள் தொடர்ந்தும் ஓமான் பாதுகாப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த வீட்டுப் பணிப்பெண்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்படுவார்களென வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்
Post a Comment