நூருல் ஹுதா உமர்
தமிழ்
தேசிய கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.
சுமந்திரன், இரா.சாணக்கியன் போன்றவர்களின் சூழ்ச்சிகளுக்கும் அம்பாறை
மாவட்ட எல்லை நிர்ணயகுழு அதிகாரிகள் சிலர் சோரம்போகியுள்ளனரா என்ற சந்தேகம்
உள்ளதாகவும், தமிழ் சகோதரர்களுக்கு நன்மை பயக்கவேண்டும் என்பதற்காக
திட்டமிட்டு அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம்
உறுப்பினர்களை குறைத்து தமிழ் உறுப்பினர்களை அதிகரிக்க நடவடிக்கை
எடுத்துள்ளனர் போன்றே தெரிகிறது என கிழக்கின் கேடயம் அமைப்பின்
பிரதானியும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ்
தெரிவித்தார்.
இன்று
அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு
கருத்து தெரிவித்த அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைதூக்கியுள்ள நிர்வாக
பயங்கரவாதம் இப்போது அம்பாறை மாவட்டத்திலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதை
ஏற்றுக்கொள்ள முடியாது. ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும் வாழும் தமிழ்-
முஸ்லிம் மக்களுக்கிடையில் சண்டையை மூட்டிவிடும் வேலைத்திட்டங்களை அம்பாறை
அரசாங்க அதிபர் காரியாலயத்தில் உள்ள சில உயர் அதிகாரிகள் செய்வதை
ஏற்றுக்கொள்ள முடியாது.
அக்கரைப்பற்று,
சம்மாந்துறை, நாவிதன்வெளி, காரைதீவு, கல்முனை, இறக்காமம், அட்டாளைச்சேனை
போன்ற பல்வேறு உள்ளுராட்சி மன்றங்களில் இனங்களுகிடையில் பிணக்குகளை
உருவாக்கும் விதமாக வட்டார பிரிப்புக்களுக்கும், எல்லை நிர்ணயங்களும்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிக இடங்களில்
முஸ்லிம் சமூகம் இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது. அதே நேரம் தமிழ்
உறுப்பினர்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த முரண்பாடுகளை கலைந்து
யாரும் பாதிக்காத வகையில் புதிய எல்லைநிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும்,
வட்டாரங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்றும் தேசிய எல்லை நிர்ணய
ஆணைக்குழுவையும், இனவாத பாகுபாடுகளின்றி நியாயமான முறையில் அம்பாறை மாவட்ட
எல்லைநிர்ணயம் மீள செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதுடன் இந்த
விடயத்தில் ஓரிருவர் மட்டும் தலையிடாமல் அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளை
பெற்று பாராளுமன்றம் சென்ற சகல முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் தலையிட்டு
முஸ்லிங்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்று
கேட்டுக்கொண்டார்.


Post a Comment