பொத்துவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்தில் இவ்வாண்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்ட முன் மொழிவுகள், கல்வி, சுகாதாரம், விளையாட்டு, காணி, பஸ் டிப்போ மற்றும் ஏனைய சேவைகள், விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதுடன் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளது.
பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.பிர்னாஸின் ஒருங்கிணைப்பில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் உயர் அதிகாரிகள், திணைக்களங்களின் பொறுப்பு உத்தியோகத்தர்கள், பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
பொத்துவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம் எம். முஷாரப் அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெறும் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் பொத்துவில், நிந்தவூர், கல்முனை, கல்முனை வடக்கு, நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment