புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்திற்கான மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு...!


புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் (Summith for a New Global Financing Pact) பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாடு பிரான்ஸின் பெரிஸ் நகரில் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ‘தற்போதைய உலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.

உலக சமூகத்தை பாதித்துள்ள பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து இந்த மாநாட்டின் ஊடாக ஆராயப்பட உள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பு முதல் கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கம் வரை, உலகளாவிய சமூகம் யுத்தங்கள் உட்பட பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்ள புதிய நிதி ஒப்பந்தத்தின் அவசியத்தை உணர்ந்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்துள்ளார்.

உச்சிமாநாட்டின் மற்றொரு நோக்கம், பலதரப்பு நிதித் துறையை மறுசீரமைத்தல் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளுடன் இணைந்த கார்பன் அற்ற உலகப் பொருளாதாரத்திற்கான பாதையை உருவாக்குவதற்கான கூட்டான பார்வை ஒன்றை உருவாக்குவதாகும்.

18வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு புது டில்லியில் நடைபெறவுள்ளதோடு ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகள் குறித்த மாநாடு நியூயோர்க் மற்றும் துபாயில் நடைபெறவுள்ள COP28 மாநாடு உள்ளிட்ட அடுத்த ஆண்டு சர்வதேச நாட்காட்டியில் உள்ள பிரதான கலந்துரையாடல்கள் மற்றும் உச்சிமாநாடுகளுடன் பிரிஜ்டவுண் முன்னெடுப்பு (Bridgetown Initiative)உள்ளிட்ட பல்வேற நிகழ்ச்சி நிரல்களை இணைக்கும் முயற்சிகளை பிரான்ஸ் மேற்கொண்டு வருகிறது.

அரசாங்கப் பிரதிநிதிகள், சர்வதேச நிறுவனங்கள், சிவில் சமூகம் மற்றும் தனியார் துறைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களின் கூட்டணியை உருவாக்குவதன் மூலம் ஒரு கூட்டான பார்வைக்குள் நிலையான எதிர்காலத்திற்கான தேவையான மாற்றங்களைச் செயல்படுத்துவதை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

எதிர்கால சந்ததியினருக்கான சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்பிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி, தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.கடந்த கால சாதனைகளை முறியடித்து பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் முதலீட்டை மேம்படுத்துவதற்கான அபிலாஷையை அடைவதற்கு இந்த மாநாடு பெரும் உதவியாக அமையும்.

Post a Comment

Previous Post Next Post