அரசியலமைப்பையும் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் சபாநாயகர் மலினப்படுத்துகிறார் - ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு...!


சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் செயற்பாடுகள் அரசியலமைப்பையும், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் மலினப்படுத்தும் வகையில் உள்ளன. நிறைவேற்று அதிகாரத்தின் பிரதிநிதியாகச் செயற்படும் சபாநாயகரின் செயற்பாடுகளுக்கு இடமளித்தால் அது எதிர்காலத்துக்குத் தவறானதொரு எடுத்துக்காட்டாக அமையும் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவதற்கு முதல்கட்டமாக கைச்சாத்திட்டுள்ளோம். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.

93வருடகால பாராளுமன்ற ஜனநாயகத்தின் அம்சங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சபாநாயகர் செயற்படுகிறார்.இவரது முறையற்ற செயற்பாடுகளைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்பதால் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர தீர்மானித்தோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பிரதிநிதியாகச் சபாநாயகர் பாராளுமன்றத்தில் செயற்படுகிறார்.இவர் தனது தனிப்பட்ட அரசியல் செயற்பாட்டை பாராளுமன்றத்துக்குள் செயற்படுத்திக் கொள்ள முயற்சிப்பதால் நாட்டு மக்களின் அரசியல் உரிமை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் அரசியலமைப்பும் மலினப்படுத்தப்படுகிறது.

அண்மையில் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த சட்டத்தின் 57 ஏற்பாடுகளில் 34 ஏற்பாடுகளில் குறைப்பாடுகள் காணப்படுகின்றன அவற்றைத் திருத்தம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கவில்லை. தன்னிச்சையான முறையில் அரசாங்கத்தின் அவசரத்துக்கு அமைய செயற்பட்டார்.

சட்டமூலத்தை சான்றுரைப்படுத்துவதை மீள்பரிசீலனை செய்யுமாறு தேசிய மட்டத்தில் உள்ள சிவில் அமைப்புக்களும், சர்வதேச அமைப்புக்களும் வலியுறுத்தி போது அதனை கவனத்திற் கொள்ளாமல் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார். இந்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த யோசனைகளில் ஐந்து பிரதான திருத்தங்கள் சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்று மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் செயற்பாடுகளுக்கு இடமளித்துக் கொண்டிருந்தால் அது எதிர்காலத்துக்கு தவறானதொரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதால் தான் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானித்தோம் என்றார்.

Post a Comment

Previous Post Next Post