ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் அனைவரும் ரணிலை ஆதரிக்கிறோம்..- டிரான்...!



போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதுடன் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையையும் நிறுத்தத் தயாரில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தார்.

அத்துடன், 2023 டிசம்பர் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நீதி நடவடிக்கையின் மூலம் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருளின் பெறுமதி 7.8 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,

“.. போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குதல் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாங்கள் தயாராக இல்லை. இந்த வேலைத்திட்டம் தொடர்பில் எம்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த ஏற்பாட்டைச் சீர்குலைக்க பல்வேறு நபர்களும் குழுக்களும் முயற்சித்து வருகின்றனர். போதைப்பொருள் வலையமைப்பிலிருந்து பணம் பெறுபவர்கள் அந்த குழுக்களுக்கு பணத்தை செலவிடுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

கடந்த டிசம்பர் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நீதி நடவடிக்கையில் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களின் பெறுமதி 7.8 பில்லியன் ரூபாவாகும். பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் கட்டிடங்களின் பெறுமதி 725 மில்லியன் ரூபா. அதற்காக செய்யப்பட்ட ரெய்டுகளின் எண்ணிக்கை 58,562. அந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,234 ஆகும்.

மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் இ கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறோம். கொரிய மொழி புலமை பரீட்சை காரணமாக குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக வரிசைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. அந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில் கொரிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பரீட்சையில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்ய உள்ளோம்.

புதிய அடையாள அட்டையை ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஊடாக வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும் கூறவேண்டும். ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் ஊடாக, போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக பாடசாலைகள் மற்றும் பொலிஸாரினால் ஏற்கனவே பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக நாம் அனைவரும் ஆதரிக்கிறோம். இந்த நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து மீட்டெடுக்கவும், வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வரவும் ஜனாதிபதியால் முடிந்தது. நிலைமையை புரிந்து கொண்டவர்கள் வேறொரு ஜனாதிபதியைப் பற்றி சிந்திக்கக் கூடாது என்பதே எமது கருத்தாகும்…”

Post a Comment

Previous Post Next Post