வெள்ளிக்கிழமை மாஸ்கோவிற்கு அருகிலுள்ள இசையரங்கில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது.இதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதோடு 145 பேர் காயமடைந்தனர்.
“மொஸ்கோவில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரார்த்தனை செய்கிறோம். துக்ககரமான இந்த நேரத்தில் ரஷ்ய அரசாங்கம் மற்றும் மக்களுடன் இந்தியா அரசாங்கம் கைகோர்க்கிறது. ”என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மொஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி இசைஅரங்கிற்குள் ஆயுதம் ஏந்திய குழு நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தது.
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், இந்த கூற்றை ஆதரிக்க எந்த ஆதாரத்தையும் ஐஎஸ்ஐஎஸ் முன்வைக்கவில்லை.
தாக்குதல் நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், குரோகஸ் சிட்டி இசையரங்கு தீப்பிடித்து எரிவதைக் காட்டியது.
அரசு ஊடகமான நோவோஸ்டி செய்தியின் பிரகாரம் ஆயுதம் ஏந்திய நபர்கள் “தானியங்கி ஆயுதங்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தினர்” . “கைக்குண்களை வீசித் தாக்கியதில் தீபற்றியது”. பின்னர் அவர்கள் “வெள்ளை நிற ரெனால்ட் காரில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது” என்றும் அந்த செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
தாக்குதல் தொடர்பில் ரஷ்ய அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் முன்கூட்டி அறிவித்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ்- என அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்டு செயற்படுவதோடு மொஸ்கோ மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மார்ச் மாதம் அமெரிக்கா உளவுத்துறை தகவல் திரட்டியிருந்தது. ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள் ரஷ்யாவில் செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒப்பீட்டளவில் அமைதியான காலப்பகுதிக்குப் பிறகு, ஐஎஸ் ஐஎஸ் வெளிப்புற தாக்குதல்களை அதிகரிக்க முயற்சிக்கிறது. ஐரோப்பாவில் அந்தத் திட்டங்களில் பெரும்பாலானவை முறியடிக்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை மாஸ்கோவில் நடந்த தாக்குதல், அதைத் தொடர்ந்து ஜனவரியில் ஈரானில் நடந்த தாக்குதல் என்பன வேறு நாடுகளில் தாக்கும் திறனை மறுமதிப்பீடு செய்யத் தூண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
“ஐஎஸ்ஐஎஸ்-கே கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷ்யாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது,” என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடிக்கடி கூறி வந்ததாக நியூயார்க்கை தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆலோசனை நிறுவனமான சௌஃபான் குழுமத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஆய்வாளர் கொலின் பி கிளார்க் கூறியுள்ளார்.
தாக்குதலுக்கான சாத்தியம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் மார்ச் 7 ஆம் திகதி பகிரங்கமாக எச்சரித்ததோடு, வரவிருக்கும் தாக்குதலை சுட்டிக்காட்டும் உளவுத்துறை தகவல் ரஷ்ய அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜனவரி மாதம் நடைபெற்ற ஈரானின் முன்னாள் ஜெனரல் காசிம் சுலைமானியின் நினைவுதின நிகழ்ச்சியில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 103 பேர் கொல்லப்பட்டதோடு 211 பேர் காயமடைந்தனர்.இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்கூட்டி ஈரானை எச்சரித்திருந்தது. இந்த தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐஎஸ்-கே பொறுப்பேற்றது.
Post a Comment