புதுமைகளை செய்து ரசிகர்களை ரசிகர்களின் கவனத்தை எப்போதும் தன் மீதே வைத்துக் கொண்டிருக்கும் இரா. பார்த்திபனின் 'டீன்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் இரா. பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டீன்ஸ்' திரைப்படத்தில் அம்ருதா, அஸ்மிதா, ஜான் பாஸ்கோ, தீபன், தீபிஸ்வரன், ஃபிராங்ஸ்டைன், கிருத்திகா ஐயர், ரச்சிதா, ரிஷி ரத்னவேல், ரோஷன், சில்வேன்ஸ்டன், விஷ்ருதா ஆகிய வளரிளம் பருவத்தை சேர்ந்த புதுமுக கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.
கேவ்மிக் ஆரே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். சாகச பயணத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை பயாஸ்கோப் யு எஸ் ஏ மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் கால்டுவெல் வேள்நம்பி+ டொக்டர் பாலசுவாமிநாதன் + டொக்டர் பிஞ்சி சீனிவாசன் + ரஞ்சித் தண்டபாணி+ இயக்குநர் இரா. பார்த்திபன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீடு கின்னஸ் சாதனையை படைத்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 12-ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினர் உற்சாகமாக அறிவித்திருக்கிறார்கள்.
இதனிடையே ஜூலை பன்னிரெண்டாம் திகதியன்று ஷங்கர் இயக்கத்தில் 'உலகநாயகன்' கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன் 2' எனும் திரைப்படம் வெளியாகிறது என்பதும் , அதற்கு போட்டியாக இரா. பார்த்திபனின் 'டீன்ஸ்' வெளியாவதால் இந்தப் படத்திற்கு வணிக ரீதியான ஆதரவு கிடைக்குமா? கிடைக்காதா? என்பது குறித்து உறுதியான முடிவினை அறிவிக்க இயலாது என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment