யுவன் சங்கர் ராஜாவின் ப்ளே லிஸ்ட்டினை ரசிகர்கள் இணையத்தில் யுவன் ட்ரக்ஸ் என கூறி கொண்டாடி வருகின்றனர். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகிவரும் தி கோட் படத்திற்கு இசை அமைத்து வருகின்றார். இந்நிலையில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இசைக் கச்சேரி ஒன்றினை வரும் 27ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதற்கு யுவன் லாங் ட்ரைவ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இசைக் கச்சேரிக்கான டிக்கெட்டுகள் இணையத்தில் விற்பனையாகி வருகின்றது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த யுவன் சங்கர் ராஜா இசைக் கச்சேரி தொடர்பாக பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, " இந்த இசைக் கச்சேரியில் கிட்டத்தட்ட 35இல் இருந்து 36 பாடல்களை நாங்கள் பாடவுள்ளோம். அதில் பெரும்பாலும் எனது குரலில்தான் பாடல்கள் இருக்கும். வெளிநாடுகளில் இசைக் கச்சேரிகள் நடத்தப்படுவதைப் போல ரசிகர்கள் மேடைக்கு அருகில் மேடையைச் சுற்றி 360 டிகிரிக்கும் இருக்கும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
வாய்ப்பிருந்தால் ரசிகர்களுக்கு மத்தியில் சென்று நான் நடனமாடவும் செய்வேன். இந்த இசைக் கச்சேரியில் பவதாரணி குரலில் பாடல் ஏ.ஐ. தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இசைக்கப்படும். கோட் படத்தில் பவதாரிணி பாடலைப் பாடட்டும் என நானும் வெங்கட் பிரபுவும் முடிவு செய்து வைத்திருந்தோம். அப்போது பவதாரிணி மருத்துவமனையில் இருந்தார். அதன் பின்னர் எல்லாம் வேறுமாதிரி ஆகிவிட்டது. ஏ.ஆர். ரகுமான் சார் லால் சலாம் படத்தில் ஏ.ஐ. தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பாடல்கள் உருவாக்கி இருந்தார். அதன்பின்னர் அது தொடர்பாக விஷயங்களைத் தெரிந்து கொண்டு எ.ஐ உரிமம் பெற்று நாங்களும் இவ்வாறு செய்தோம்.
சிம்பு: 90ஸ் காலத்தில் இருந்து இப்போதுவரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களைத்தான் இசைக் கச்சேரியில் பாடப்போகின்றோம். இசைக் கச்சேரியில் நடிகர் சிம்புவை அழைத்துப் பார்க்கின்றேன் அவர் வந்தால் மகிழ்ச்சிதான். அதேபோல் இளையராஜா வருவாரா என்ற கேள்விக்கு, " முயற்சி செய்கின்றேன். அவர் வந்தால் பாடிவிடலாம் என பதில் அளித்தார். இளையராஜா மீது விமர்சனம்: மேலும் இளையராஜா எம்.பி., ஆன பின்னர் அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றதே அது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டது. அதற்கு யுவன் சங்கர் ராஜா சிரித்துக் கொண்டே, " விமர்சனங்களை நான் விமர்சனங்களாகத்தான் பார்க்கின்றேன். என்னை எதுவும் தொந்தரவு செய்யாது. விமர்சனங்கள் எனக்கு பாதிப்பினை ஏற்படுத்தாது. என்னைச் சுற்றி எனக்கு நெருக்கமானவர்கள் இருக்கின்றார்கள். எனவே விமர்சனங்கள் எனக்கு எந்தவகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது" என தெரிவித்தார்.
Post a Comment