நியூயார்க்: ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக இந்தியாவில் 80 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளதாக ஐ.நா. பொதுச்சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு "தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான பசியற்ற முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்டு டென்னிஸ் பிரான்சிஸ் பேசியதாவது: கடந்த 5-6 ஆண்டுகளில் 80 கோடி மக்களை வறுமையில் இருந்து வெளியேற்றி இந்த திசையில் இந்தியா வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கான முன்னெடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.
இந்திய கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஸ்மார்ட்போன் மூலம் பணத்தை செலுத்தவும், பெறவும் ஆர்வம் காட்டுகின்றனர். ஸ்மாட்போன் பயன்பாட்டால்தான் இத்தனை கோடி பேரை வறுமையிலிருந்து மீட்க இந்தியாவால் முடிந்துள்ளது. ஆனால், இதுபோன்ற டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை ஏனைய தெற்காசியாவின் பல நாடுகளில் மேற்கொள்ளப்படவில்லை.
வங்கி அமைப்புடன் ஒருபோதும் தொடர்பில்லாத இந்திய கிராமப்புற விவசாயிகள் இப்போது தங்கள் அனைத்து வணிகங்களையும் தங்களது ஸ்மார்ட்போனில் செய்து முடிக்கின்றனர். இதற்கு, இணைய பரவலாக்கம் முக்கியமானதாக உள்ளது. இந்தியாவில் அநேகமாக எல்லோரிடத்திலும், ஸ்மார்ட்போனும், இணைய இணைப்பும்உள்ளது. அவர்கள் வறுமையிலிருந்து மீள்வதற்கு ஏதோ ஒரு வகையில் அது உதவுகிறது. இதேபோல வறுமையிலிருந்து மீள, பிற நாடுகளும் டிஜிட்டல் மயமாக்கத்துக்கு அதிக முன்னுரிமை தர வேண்டும். இவ்வாறு டென்னிஸ் பிரான்சிஸ் பேசினார்.
உலகளவில் முன்னிலை: கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் டிஜிட்டல்மயமாக்கல் என்பது பிரதமர் நரேந்திர மோடி அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது. இதனால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா உலகளவில் முன்னிலையில் உள்ளது. ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் ஆகியவற்றை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் மூலமாக இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. இதனால், பல்வேறு அரசு மற்றும் சமூக நல திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.
Post a Comment