உலகின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான இந்தியாவின் ரட்டன் டாட்டா தனது 86வது வயதில் இன்றைய தினம் இயற்கை எய்தினார். இதனை டாட்டா குழுமம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் முன்னணி வர்த்தக தலைவர்களில் ஒருவரான ரட்டன் டாட்டா, இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தனது வர்த்தக குழுமத்திற்கான தலைமைத்துவத்தை முன்னெடுத்துச் சென்றமை விசேட அம்சமாகும்.
டாட்டா நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகும். டாட்டா தனது நிர்வாக காலத்தில் மேற்குலக தயாரிப்புகளை ஒத்த பல வாகனங்களை அறிமுகப்படுத்தி சந்தைக்கு வழங்கியுள்ளார்.
2012ம் ஆண்டு டாட்டா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து அவர் ஓய்வுபெற்றார். வர்த்தகர், சாதனை மனிதர், இலக்குடன் கூடிய வியாபாரத் தலைவர் என்பதற்கு மேலதிகமாக ரட்டன் டாட்டா ஒரு மனிதாபிமானம்மிக்க ஒரு நல்ல மனிதர் என இந்திய பிரதமர் நரேந்த்ர மோதி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது அன்புக்குரிய நண்பரை இழந்துவிட்டதாகவும், மிகவும் புகழ்பெற்ற, இரக்கம் நிறைந்த இதயதைக் கொண்ட மகன்களில் ஒருவரை இந்தியா இழந்துவிட்டதாகவும் முன்னணி பணக்காரர் முகேஷ் அம்பானி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
திருமணம் முடிக்காது தனது முதுமை வரை தனியாகவே வாழ்ந்து வந்த ரட்டன் டாட்டா, தான் ஈட்டிய சொத்துக்களில் பெரும்பகுதியை ஏழைகளுக்கும், தன்னார்வ தொண்டு சேவைகளுக்கும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment