முஸ்லிம் சமூகம் பிரச்சினைகளை எதிர்கொண்ட போது நாம் துணிச்சலுடன் களமிறங்கினோம்…!


கண்டி மாவட்டத்திற்கு எதையும் செய்யவில்லை என்பது அபாண்டம் என்று இனிகலை பொதுக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு…!


கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளின் போது துணிச்சலாக களம் இறங்கி எதிர்த்து நின்று, சமூகத்தைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

கண்டி, இனிகலையில் புதன்கிழமை(22) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் இந்த மாவட்டத்தில் நாற்பது வருடங்களாக அரசியல் செய்தவர். 1994 இல் தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு நான் தெரிவு செய்யப்பட்ட பின்னர் ,2000 ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டபோது, துரதிர்ஷ்டவசமாக அதற்கு முந்திய வருடம் அவர் காலம் சென்றிருந்தார்.

2000ஆம் ஆண்டில் நான் கண்டி மாவட்டத்தில் மரச் சின்னத்தில் போட்டியிட்டபோது நான் வெற்றிபெறுவேன் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இறைவனின் உதவியால் அந்தத் தேர்தலில் நான் வெற்றிபெற்ற போதும் எங்கள் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஹெலிகொப்டரில் பயணித்துக் கொண்டிருந்தபோது மரணிக்க நேர்ந்தது. அந்த பெரும் தலைவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்குள் மரணித்தமை பெரும் மனப்பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

நான் 30 வருடங்களாக பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கின்றேன். இந்த 30 வருடங்களில் நான் கண்டி மாவட்டத்திற்கு எதையுமே செய்யவில்லை என்று சிலர் பொய் குற்றம் சாட்டுகின்றனர். பல துறைகளிலும் நான்செய்த வேலைகளை குறிப்பிடுவதாக இருந்தால் பெரிய பட்டியல் ஒன்றையே இடலாம். அவற்றில் ஒன்றை மட்டும் குறிப்பிடுவதாக இருந்தால், நீர்வழங்கல் அமைச்சராக நான் இருந்தபோது, 52 ஆயிரம் மில்லியன் ரூபா சீனாவிடம் இருந்து கடன் பெற்று, ஆரம்பிக்கப்பட்டு, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கொண்டு திறந்துவைத்த குஹாகொடை நீர்சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிப்பிடலாம். இது அக்குறணைக்கும் அப்பால் அங்கும்புறை வரை குடிநீர் வழங்கும் ஆற்றலைக் கொண்டது. இப்பிரதேசத்தில் குடிநீர் வசதியே அற்ற குக்கிராமங்கள் வரை குடிநீர் வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளேன். சுமார் 16 நீர் வழங்கல் திட்டங்களை நான் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் நடைமுறைப்படுத்தி யுள்ளேன். இவ்வாறாக அமைச்சுப் பதவியில் இருந்த காலங்களில் நான் ஏராளமான செயற்திட்டங்களை இப்பகுதியில் முன்னெடுத்துள்ளேன்.

நான் நீர்வழங்கல்,வடிகாலமைப்பு அமைச்சராக இருந்தபோது குஹா கொடையில் ஒரு சுத்திகரிப்பு நிலையமொன்று
ஜப்பான் உதவியோடு இருந்தது. நான் சீனா அரசாங்கத்தின் உதவியோடு நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைத்து அதி லிருந்து ஹாரிஸ்பத்துவ தொகுதியில் எல்லா மூலைமுடுக்குகளுக்கும் நீரைக் கொண்டு போவதற்கான குழாய்கள் எல்லாவற்றையும் பதித்தாகிவிட்டது. 29 நீர் கோபுரங்கள் அமைத்தாகிவிட்டன. 52 ஆயிரம் மில்லியன் சீன கடனுதவியைப் பெற்று , இந்த நாட்டில் மிகப்பெரிய நீர்வழங்கல் திட்டமாக இதை நான் அமைச்சராக இருந்தபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துவந்து ஆரம்பித்தும் வைத்தாகிவிட்டது.

இந்த நீர் மலைப் பாங்கான பிரதேசங்களில் ஒன்றான கல்ஹின்னை வரைக்கும் கொண்டு செல்லப்படுகின்றது. அதற்கான ஏற்பாட்டைத்தான் முடித்திருக்கின்றோம். 95% வீதமான வேலைகள் முடிந்து, இன்னும் 5 சத வீதமான வேலைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

நாடு வங்குரோத்து நிலைமைக்குள்ளானதால் கடன் தருவதை நிறுத்தி விட்டார்கள்.
ஆனால், மீதமுள்ள 5% அவசரமாக விடுவிக்கப்படவுள்ளதான செய்தியும் வந்திருக்கிறது. என்னுடைய முயற்சியில் நான் கையெழுத்திட்டு, ஆரம்பித்து, பிரதமரைக் கூட்டிவந்து திறந்து வைத்த திட்டம், பெரும்பான்மையான வேலைகள் முடிவடைந்த நிலையில், மீதமிருக்கும் வேலைத்திட்டம் முடிவடையாத காரணத்தால் நீர் வினியோகிக்கப்படாவிட்டாலும், சுத்திகரிப்பு நிலைய வேலைகள் நடந்து முடிந்துவிட்டன.

குஹாகொடையில் இரண்டாவது சுத்திகரிப்பு நிலையம் இருக்கிறது. இதை செய்து முடிப்பதற்கு என்னுடைய அமைச்சுக் காலத்தில் நான் சீனாவுக்கு நான்கு தடவைகள் சென்று கதைத்து, கொண்டுவந்து சேர்த்தது உங்களுக்கு நினைவிருக்கும். முன்னாள் அமைச்சர் ஏ.சீ.எஸ் ஹமீட் டனிடா திட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவந்தார் ,அதை மிகவும் சிலாகித்துக் கதைப்பார்கள், அதைவிடவும் இது ஏறத்தாழ 20 மடங்கு பெரிய செயல் திட்டம்.அதாவது ஹாரிஸ்பத்துவ,பாத்ததும்பறை நீர்வழங்கல் திட்டம், இது எப்படியென்றால், பாத்ததும்பறையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் தொரகமுவ என்ற ஊர் இருக்கின்றது, அந்த ஊரைப் போல் கஷ்டமான ஊர் கிடையாது.ஆனால், அந்த மக்களும் கூட இன்று இதனால் பயனடைகிறார்கள்.

அதேபோன்று, கண்டி மாவட்டத்தில் நான் 16 நீர்வழங்கல் திட்டங்களைச் செய்திருக்கின்றேன்.ஆனால், இவற்றைப் பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கவில்லை.எலா சமூகத்தினரும் இவற்றால் நன்மையடைகிறார்கள்.

கண்டி நகரத்துக்கான கழிவு நீர் செயல் திட்டத்தை கொரிய அரசாங்கத்தின் உதவியுடன், இருபதினாயிரம் மில்லியன் செலவில் அறிமுகப்படுத்தினோம். பாதைகள் தோறும் அதற்கான குழாய்கள் பதிக்கப்பட்டு அது முன்னெடுக்கப்பட்டது. முழு நகரத்தின் கழிவு நீரையும் சுத்திகரிப்பதற்கான நிலையம் ஒன்றையும் அமைத்துள்ளோம். நன்றாக சுத்தீகரித்து அங்கிருந்து வெளியேற்றப்படும் நீர் ஆறுகளில் கலக்க விடப்படுகின்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தோம்.

திகனை தாக்குதல் சம்பவம் தொடக்கம் நம் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் , மலட்டுக் கொத்து, மலட்டு உள்ளாடைகள், கருத்தடை அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட இன்னோரன்ன அபாண்டங்களுக்கு எதிராக நாங்கள் இயன்றவரை போராடியுள்ளோம்.

அதன் பின்னர் கொரோனா -கொவிட்-19 பெருந் தொற்று பரவியது. அக்காலப் பகுதியில் அக்குறணை இரண்டு மாதங்களுக்கு முற்றாக தனிமைப்படுத்தப்பட்டது. யாரும் உள்ளே செல்லவோ, வெளியே வரவோ முடியாதிருந்தது. அது வேண்டுமென்றே சமூகத்தைப் பழிவாங்குவதற்காக செய்யப்பட்டது. அவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மணிக்கணக்கில் அவற்றுக்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளேன். முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அநீதிகளை அரசாங்கத்திடம் துணிச்சலுடன் சுட்டிக் காட்டியுள்ளேன். இவற்றை எல்லாம் நான்தான் செய்தேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள விரும்பவில்லை. கடந்த காலங்களில் சமூகத்திற்காக பாராளுமன்றத்தில் நான் குரல் கொடுக்கவில்லை என்று யாரேனும் கூறினால், எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி அதற்கான பதில் கிடைக்கும். எனது பாராளுமன்ற உரைகளைத் தொகுத்து, அவற்றை அன்றைய தினம் ஐந்து பாகங்களைக் கொண்ட நூல்களாக கண்டியில் வெளியிடவுள்ளேன்.

எதிர்க்கட்சியில் இருந்தாலும் சர்வதேச சமூகத்துக்கும் எங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை எத்திவைக்க முடிந்தது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வருவதற்கு
இரண்டு நாட்களுக்கு முன்னரே பாராளுமன்றத்தில் இருந்து முஸ்லிம் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஒரு மகஜரை பாகிஸ்தான் தூதரகத்தில் கையளித்திருந்தோம். இம்ரான்கானை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு அதில் கேட்டிருந்தோம். ஆனால் இம்ரான் கான் வந்த பிறகு பாகிஸ்தான் தூதரகம், வெளிவிவகார அமைச்சு என்பன எங்களுக்கு அதற்கான வாய்ப்பை பெற்றுத் தர முயற்சிக்கவில்லை. அவர் அடுத்த நாள் திரும்பிப் போவதாக இருந்தார்.

அதன் பின்னர் நாங்கள் இம்ரான் கான் தங்கியிருந்த ஹோட்டலின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டோம். அதன் பின்புதான் விமானம் ஏற முன்னர் அவர் எங்களைச் சந்தித்தார்.
வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்காத காரணத்தினால் தான் எங்களைச் சந்திக்க வாய்ப்பில்லாமல் போனதாக அவர் அப்பொழுது கூறினார்.

இருந்தும் எங்களைச் சந்திக்காவிட்டாலும் நாங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பலவந்த ஜனாசா எரிப்பு உள்ளிட்ட விடயங்களை அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் பேசியிருப்பதாகவும்,”ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் மாநாடு அமர்வின் போது இது வரை காலமும் பாக்கிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. அப்படியான நிலையில் நீங்கள் பலவந்தமாக ஜனாசாக்களைத் தொடர்ந்தும் எரித்தால், இம்முறை நாங்கள் எதிர்த்து வாக்களிக்க மாட்டோம், ஆனால் வாக்களிப்பில் இருந்து தவிர்ந்து கொள்வோம்” என்று வலியுறுத்திக் கூறி யிருப்பதாகவும், அதன் காரணமாக அரசாங்கமும் ஜனாதிபதியும் முடிவை மாற்றிக் கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கையுடன் எங்களிடம் உறுதியளித்தார்.
இப்படியாக நாங்கள் சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளிலும் துணிந்து குரல் கொடுத்துள்ளோம். முன்னின்று செயற்பட்டுள்ளோம்.

இது வரைகாலமும் பாராளுமன்றத்தில் இந்த மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவம் எங்கள் தரப்பினாலேயே பாதுகாக்கப்பட்டு வந்தது. இம்முறை வேறு தரப்புகளில் புதியவர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களில் பலருக்கு போதிய அரசியல் அனுபவம், மற்றும் உரிய தகைமைகள் உள்ளனவா என்று தெரியவில்லை. அந்த வேட்பாளர்களை மக்களுக்கு ஒழுங்காகத் தெரியாது.

நானும்,சக வேட்பாளர் அப்துல் ஹலீமும் தொலைபேசி சின்னத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இங்கு போட்டியிடுகின்றோம்.நமது கண்டி மாவட்டத்தில் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக எங்களுக்கு வாக்களிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம் என்றார்.

Post a Comment

Previous Post Next Post