கலங்கும் பெஞ்சமின் . அயண்டோமுக்கு பதிலடி…!



ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக ஈரான் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கிறது. இந்த நேரத்தில் பலருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது இஸ்ரேல் மீது ஈரான் அணு குண்டை வீசுமா என்பது தான்.

இஸ்ரேல் ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகளைக் குறிவைத்து தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருந்தது. இந்தச் சூழலில் ஈரான் நேரடியாக இந்த மோதலுக்குள் வந்துள்ளது அங்குப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

ஈரானிடம் அணு குண்டு இருக்கிறதா? இதற்குச் சுருக்கமான பதில் இல்லை என்பதே ஆகும். தற்போது வரை உலகில் மொத்தம் 9 நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் உள்ளன.

இந்த 9 நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் உள்ளன. இதுவரை ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லை. அதேநேரம் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனுக்கு மிக நெருக்கமாக இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும், ஈரான் இதுவரை தன்னிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்றே தொடர்ந்து கூறி வருகிறது. மேலும், மின்சாரத்தை உருவாக்க மட்டுமே அணுசக்தி திட்டத்தைப் பயன்படுத்துவதாகவும் கூறுகிறது.

ஆனால், இதை இஸ்ரேல் மறுத்தே வருகிறது. ஈரான் ரகசியமாக அணு குண்டைத் தயாரித்ததாக இஸ்ரேல் நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாகவே கடந்த 20 ஆண்டுகளாக ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

குறிப்பாக ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தின் “தந்தை” என்று கருதப்படும் மொஹ்சென் ஃபக்ரிசாதே என்பவர் 2021இல் ஏஐ தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ரோபோ கருவியில் இணைக்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கி மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுபோல ஈரானின் அணு சக்தி திட்டங்களைக் குறிவைத்து இஸ்ரேல் பல சீக்ரெட் ஆபரேஷன்களை நடத்தியுள்ளது.

அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய ஏதுவாக ஈரான் அதிகளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரித்து வருகிறது. இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணு உலைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமின்றி அணு ஆயுதங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒபாமா அதிபராக இருந்த 2015ல் இதைத் தடுக்க ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.

அதாவது செறிவூட்டப்பட்ட யூரேனியம் உற்பத்தியைக் குறைத்தால் ஈரான் மீதான சர்வதேச தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், 2018ல் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். இதையடுத்து ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யூரேனியம் உற்பத்தியை மேலும் அதிகரித்தது.

அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தின் படி 3.67% தூய்மையான செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரான் உற்பத்தி செய்யலாம். ஆனால், அந்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில், இப்போது ஈரான் 83.7% தூய்மையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக 3 முதல் 5 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் தான் அணு ஆலைகளுக்குப் பயன்படும். அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு யுரேனியத்தை 90 சதவீதம் செறிவூட்ட வேண்டும். இதை வைத்துப் பார்க்கும் போதே ஈரான் எதை நோக்கிச் செல்கிறது என்று தெரிகிறது. தற்போது ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்ற போதிலும் இன்னும் 1.5- 2 ஆண்டுகளில் அந்த நிலை மாறலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

Post a Comment

Previous Post Next Post