ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டாரஸின் வாழ்த்துச் செய்தியை ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பண்பான தன்மைக்கும் வாழ்த்து தெரிவித்த இணைப்பாளர் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வரவேற்றார்.
மக்கள் எதிர்பார்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதால் எதிர்வரும் காலம் சவாலானதாக அமையுமென சுட்டிக்காட்டிய ஐ.நா.இணைப்பாளர் சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் வேலைத்திட்டம் மற்றும் வறுமை ஒழிப்பு முயற்சிகளுக்கு ஐ.நா ஒத்துழைப்பு வழங்குமெனவும் உறுதியளித்தார்.
ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊழல் ஒழிப்புத் திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்த மார்க் அண்ட்ரூ, அந்த முயற்சிகளுக்கு ஐ.நா தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குமெனவும் உறுதியளித்தார்.
அதேபோல் சமூகத்தில் தேசிய சமாதானத்துக்கான புதிய அரசாங்கத்தின் பூர்வாங்க முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த வதிவிட இணைப்பாளர், ஒவ்வொரு தரப்பினருக்கு மத்தியிலும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கும் பாராட்டு தெரிவித்தார்.
அதேபோல் நாட்டுக்கு நிலையான சமாதானத்தை உருவாக்குவதற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமெனவும் அவர் உறுதியளித்தார்.
Post a Comment