எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் ஜனநாயக ரீதியாக தாங்கள் விரும்பிய கட்சிக்கும் வேட்பாளருக்கும் வாக்குகளைச் செலுத்துவதற்கான நல்லதொரு சூழலை ஏற்படுத்துமாறு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஜம்இய்யத்துல் உலமா சபை ஏறாவூர் கிளைக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் is குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிமிக்க சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தலினை சந்தித்து சில வாரங்களின் பின்னர் பொதுத்தேர்தல் ஒன்றிற்கு முகங்கொடுக்க வேண்டியதொரு இக்கட்டான காலகட்டத்தில் உள்ளோம். செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலானது, ஜனநாயக ரீதியாகவும், வன்முறைச் சம்பவங்களின்றி நீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெற்றதனை தாங்கள் நன்கறிவீர்கள்.
ஏதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பலரும் போட்டியிடவுள்ள நிலையில், நானும் போட்டியிடுவதற்காக தீர்மானித்துள்ளேன். குறித்த பொதுத் தேர்தலானது நீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெற வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
குறிப்பாக பொதுத்தேர்தல் இடம்பெறுகின்ற போது அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தங்களுக்குரிய வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக பணங்களையும், அன்பளிப்பு பொருட்களையும் வழங்குகின்ற ஒரு மோசமான கலாச்சாரம் எமது பிரதேசத்திலே தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்த பிரதேசத்திலே வாழுகின்ற ஏழை மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகிறது. இது அப்பட்டமான தேர்தல் இலஞ்சமும் மோசடியுமாகும்.
இவ்வாறு சிறு தொகைப் பணங்களையும், சில்லறைப் பொருட்களையும் கப்பமாக கொடுத்து இப்பிரதேச மக்களின் விலை மதிக்க முடியாத வாக்குரிமையினை சூறையாடுகின்ற அரசியல்வாதிகளிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்குள்ளது. இந்தக் கீழ்த்தரமான செயற்பாடுகள் இந்தப் பிரதேசத்திலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்.
மக்களை பிழையாக வழிநடாத்தி பதவிகளை அடைந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்படுகின்ற இந்தக் கீழ்த்தரமான நிகழ்வுகளை ஒருபோதும் அங்கிகரிக்க முடியாது. குறிப்பாக, ஏதிர்வரும் தேர்தலில் இங்குள்ள மக்கள் ஜனநாயக ரீதியாக தங்களது வாக்குரிமையினை தாங்கள் விரும்பிய கட்சிக்கும் வேட்பாளருக்கும் செலுத்துவதற்கான நல்லதொரு சூழலை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment