ஹமாஸ் அமைப்பு அழிக்கப்பட வேண்டும் - மார்க்கோ ரூபியோ...!

 


இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 42 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதையடுத்து  ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றவர்களை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பலஸ்தீனர்களும்  விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

 

ஹமாஸ் பிடியில் இன்னும்  இஸ்ரேலிய பணயக்கைதிகள் உள்ளனர். அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார்.


ஜெருசலேமில் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது,

"ஹமாஸ் அதிகாரத்தில் இருக்கும் வரை சமாதானம் சாத்தியமற்றது. இதனால் ஹமாஸ் அமைப்பு அழிக்கப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.


இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும் போது,

"காஸா போர் தொடர்பாக இஸ்ரேலும், அமெரிக்காவும் ஒரு பொதுவான உத்தியை கொண்டுள்ளன. அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்காவிட்டால் ஹமாஸ்  நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்.


காஸாவில் ஹமாஸ் அமைப்பின்  இராணுவத் திறனையும், அதன் அரசியல் ஆட்சியையும் ஒழிக்க அரசு உறுதியாக இருக்கிறது. நாங்கள் அனைத்து பணயக் கைதிகளையும் மீட்டு வீட்டுக்கு அழைத்து வருவோம். காஸா  ஒருபோதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வோம்.


இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே போர் நிறுத்தம் பலவீனமாக உள்ளது. பணயக் கைதிகள் பரிமாற்றத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்னும் நடத்தப்படவில்லை," என்று அவர் கூறினார்.

 

Post a Comment

Previous Post Next Post