
ஹட்டன் ரயில் நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கிக்கு தேவையான எரிபொருள் வழங்கப்படாததால், இரவு நேரங்களில் மின்சாரம் தடைப்படும் சந்தர்ப்பங்களில் ரயில் நிலையம் இருளில் மூழ்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நாட்களில் மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகவும், அதிக காற்று வீசுவதாலும் அவ்வப்போது மின்சாரம் தடைப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில் நிலையத்தில் பெரிய மின்சார பிறப்பாக்கி இருந்தாலும், எரிபொருள் பற்றாக்குறையால் ஹட்டன் ரயில் நிலையம் இருளில் மூழ்குவதாக ஹட்டன் ரயில் நிலைய அதிபர் ஜானக பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஹட்டன் ரயில் நிலையம் மலையக ரயில் மார்க்கத்தில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையமாகவும், அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ரயிலில் பயணிக்கும் நிலையமாகவும் அறியப்பட்டாலும், இந்த நாட்களில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ரயில் பயணிகள் நிலைய அதிபரிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர்.
ஹட்டன் ரயில் நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கிக்கு தேவையான எரிபொருளை ரயில்வே திணைக்களம் வழங்காமல் இருப்பதாகவும் ஹட்டன் ரயில் நிலைய அதிபர் மேலும் தெரிவித்தார்.
மின் பிறப்பாக்கியில் உள்ள எரிபொருள் தொட்டியில் 20% வீதத்திற்கும் அதிகமான எரிபொருள் இருந்தால் மட்டுமே மின் பிறப்பாக்கியை இயக்க வேண்டும் என்று ரயில் பொறியியலாளர் பிரிவு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும், எனினும் தற்போது 17% வீதம் எரிபொருள் இருப்பதால் மின் பிறப்பாக்கியை இயக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் ஹட்டன் ரயில் நிலைய அதிபர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஏப்ரல் மாதம் மின் பிறப்பாக்கிக்கு 50 லீட்டர் டீசல் கோரி கடிதம் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் ரயில்வே திணைக்களம் அதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹட்டன் ரயில் நிலைய அதிபர் ஜனக பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கையில், 50 லீட்டர் டீசல் வழங்கினால், அது 5 மாதங்களுக்கு போதுமானதாக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment