கடற்படை தலைமையகத்துடன் எந்தவித தொடர்பும் அற்றிருந்த 06 கடற்படை வீரர்களுடன் காணாமல்போன படகுடன் 30 நாட்களுக்கு பின்னர் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறூப் கெப்டன் இந்திக்க டி சில்வா நேற்று தெரிவித்தார்.
தென்பகுதி கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் காணாமல்போன படகுடன் மீண்டும் நேற்று தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக கடற்படை பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.
“படகில் உள்ள ஆறுபேருடன் நேற்று தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு என்னவானது? ஏன் இவ்வாறு தொடர்பு துண்டிக்கப்பட்டது? எங்கு இருக்கிறார்கள் என்ற விபரங்கள் எதுவும் தற்போது தெரியவில்லை” எனக் கூறிய அவர், கடற்படை வீரர்களை அழைத்துவரும் நடவடிக்கை முன்னனெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவர்கள் கரைக்கு திரும்பியதன் பின்னரே மேலதிக விபரங்களை கூறமுடியுமென தெரிவித்த அவர் இன்று (நேற்று 18) இரவு அவர்கள் கரைக்கு திரும்பலாமென தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
சம்பவம் பற்றி அவர்' மேலும் தெரிவிக்கையில்:
தென் பகுதி கடலில் விசேட கடமைகளுக்காக அனுப்பப்பட்டிருந்த வேளை, கடந்த செப்டெம்பர் 17ஆம் திகதியிலிருந்து தொடர்பை இழந்து காணாமல் போன கடற்படைக் கப்பலுடன் நேற்று அக்டோபர் 18ஆம் திகதி பிற்பகல் மீண்டும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிட்டி ஏ 521 கடற்படையின் கப்பலுக்கு முடிந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்தக் கப்பலுடனான தொடர்பை இழந்ததையடுத்து, 2022 செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் கடற்படையின் விரைவுத் தாக்குதல் கப்பல்கள் மற்றும் ஆழ்கடல் ஊடுருவல் கப்பல்கள் தென் கடற்பரப்பை உள்ளடக்கிய இந்தக் கப்பலைத் தேடும் பணியை ஆரம்பித்ன.
இதற்காக இலங்கை விமானப்படையின் உதவியைப் பெற்றுக் கொண்டது. மேலும், கடற்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், சம்பவம் குறித்து இலங்கையை அண்டியுள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களுக்குத் தெரிவித்ததுடன், அந்த கடல் பகுதிகள் வழியாகச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேற்றைய தகவலின்படி, தென் கடல் பகுதியில் இந்தக் கப்பல் சிறப்பு ஆய்வுக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும், மோசமான வானிலை காரணமாகவும், கப்பல் விபத்துக்குள்ளானது. சுமார் 400 கடல் மைல்கள் (சுமார் 740 கிமீ) இலங்கையின் தென்கிழக்கே ஆழ்கடல் பகுதிக்குள் அது சென்றுள்ளது.
இதன் காரணமாக 2022 செப்டம்பர் 17 முதல் கடற்படையுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கப்பலிலிருந்த பணியாளர்களால் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்து, கரையை நோக்கிப் பயணம் செய்யும் போது, இந்தக் கப்பலைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட A521 என்ற கப்பல் நேற்று (அக்டோபர் 18, 2022) தெற்குக் கடலிலுள்ள கப்பலுடன் தொடர்பு கொண்டது.
இதன்படி, கப்பலிலிருந்த ஆறு (06) கடற்படையினர் பத்திரமாக மீட்கப்பட்டதன் பின்னர் கரைக்கு அழைத்து வரப்படுவதுடன், சம்பவம் தொடர்பில் கடற்படையினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Post a Comment