"என்னைக் கொல்ல இடம்பெற்ற சதி குறித்து முன்னரே தெரியும்" - இம்ரான்கான்…!


பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தன்னை கொல்ல நடந்த சதி குறித்து தனக்கு முன்னரே தெரியும் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றிருந்தபோது, அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.

இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, காயமடைந்தார். இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இம்ரான்கான் லாகூரில் உள்ள அவருக்கு சொந்தமான சவுக்கத் கானும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் வைத்தியர் பைசல் சுல்தான் என்பவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.



எனினும் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

இந்நிலையில் இம்ரான்கான் நேற்று இரவு வைத்தியசாலையில் இருந்தவாறே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,

என்னை கொல்ல திட்டமிட்டுள்ளனர் என்பது தாக்குதல் நடப்பதற்கு முந்தைய நாளே எனக்கு தெரியும். வெளியே செல்ல வேண்டாம் என்று என்னிடம் அறிவுறுத்தப்பட்டது. அன்று நான் கன்டெய்னரில் இருந்தபோது திடீரென என் கால்களில் குண்டுகள் பாய்ந்து கீழே விழ ஆரம்பித்தேன்.

4 துப்பாக்கி குண்டுகள் என் காலை துளைத்தன. அங்கு 2 பேர் இருந்தனர். அவர்கள் ஒரே நேரத்தில் என்னை தாக்கியிருந்தால் நான் உயிர் பிழைத்திருக்கமாட்டேன்.

பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சரான ராணா சனுல்லா மற்றும் உளவுத்துறையின் தலைவர் பைசல் ஆகியோரே இந்த சதிக்கு பின்னால் இருக்கிறார்கள். இந்த தேசத்தை காப்பற்ற இராணுவ தளபதி மற்றும் தலைமை நீதிபதியை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இம்ரான்கான் பேசினார்.

Post a Comment

Previous Post Next Post