இஸ்ரேல் விதித்த கெடு முடிந்தது - அடுத்தது என்ன? திகிலில் உறைந்துள்ள காசா மக்கள்



 
கடந்த 7 அக்டோபர் 2023 அன்று அதிகாலையில் இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை 20 நிமிடத்தில் ஏவி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தாக்குதலைத் தொடங்கினர். பின்னர் அதே நாளில் மீண்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டதுடன், ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் நாட்டிற்குள்ளும் ஊடுறுவி தாக்குதல் நடத்தினர். இதில் 1,300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 150 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்ததுடன், பலரை காசாவுக்குக் கடத்திச் சென்றனர். 

ஹமாஸ் ஆயுதக் குழுவின் தாக்குதல் ஒரு தீவிரவாத நடவடிக்கை என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கண்டனம் தெரிவித்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இத்தாக்குதலைக் கண்டித்தன. 

இதற்கிடையே, போருக்குத் தயார் நிலைப் பிரகடனத்தை இஸ்ரேல் பிறப்பித்ததுடன் உடனடி தாக்குதலையும் தொடங்கியது. இஸ்ரேலுக்கு உதவும் விதத்தில் அமெரிக்கா ஒரு போர்க்கப்பலையும் அனுப்பிவைத்தது. தாக்குதல் தொடங்கி ஒருவாரம் கடந்த நிலையில் காசா பகுதியில் தரைவழித் தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கியது. இந்தப் போரில் கிட்டத்தட்ட 2,000 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 3,38,000 பேர் இடம்பெயர்ந்தனர்.

காசா மீது வெள்ளிக்கிழமை நடத்திய தரைவழித் தாக்குதலில், காணாமல் போன இஸ்ரேலியர்களின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடத்திச் சென்ற இஸ்ரேலியர்களைக் கண்டுபிடிக்கும் நோக்குடன், இந்த தரைவழித் தாக்குதலை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலாக நடத்தியதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post