அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் – திஸ்ஸ அத்தயநாயக்க எச்சரிக்கை!



சஜித் பிரேமதாசவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கத்துக்கு எதிரான அவரின் குரலை அடக்குவதற்குமே அரசாங்கம் மத்திய கலாசார நிதியத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால் அதற்கு முன்னர் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் வீதிக்கிறங்குவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மத்திய கலாசார நிதியத்தில் 2017 முதல் 2020 காலப்பகுதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அரசாங்கம் அதுதொடர்பில் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசாங்கம் தெரிவிக்கும் இந்த காலப்பகுதியில் சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்தபோது அவருக்கு கீழே மத்திய கலாசார நிதியம் இருந்து வந்தது.

அரசாங்கத்துக்கு எதிராக சஜித் பிரேமதாச தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் அரசாங்கத்தின் இயலாமை தொடர்பாக தெரிவித்துவரும் விடயங்களால் அரசாங்கத்துக்குள் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதனால் சஜித் பிரேமதாசவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவே இவ்வாறானதொரு நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

மத்திய கலாசார நிதியத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கடந்த காலங்களிலும் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக 2019இல் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தி குற்றச்சாட்டுக்கள் தெரிவி்க்கப்பட்டபோதும் அதனை உறுதிப்படுத்த முடியாமல் போனது.

அதேபோன்று கோப் குழுவிழும் இதுதொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அப்போதும் சஜித் பிரேமதாசவுக்கு எதிிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு சென்றபோது அதிலும் எந்த பெறுபேறும் கிடைக்கவில்லை. கோட்டாபய ராஜபக்ஷ் காலத்தில் விசாரணை குழு அமைத்து இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க முற்பட்டபோதும் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இவ்வாறு 5 தடவைகள் இந்த மத்திய கலாசார நிதியம் தொடர்பில் விிசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட கொச்சிக்கடை புனித அந்நேனியார் தேவாலயம், கட்டுவாப்பிடிய புனித செபஸ்த்தியா ஆரலயம் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கே சஜித் பிரேமதாச மத்திய கலாசார நிதியத்தில் இருந்து, தேவையான நிதியை பெற்றுக்கொடுத்தார்.

அதேபோன்று பெளத்த விகாரை, இந்து கோயில்மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் ஞாயிறு அறநெறி பாடசாலைகளின் கட்டிட புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். அதனை தவறு என்று யாரும் தெரிவிப்பதில்லை.

எனவே அரசாங்கம் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக மத்திய கலாசார நிதியம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு முன்னர், மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் வீதிக்கிறங்குவார்கள் என்றார்.

Post a Comment

Previous Post Next Post